பிரித்தானிய ஆட்சியின் இறுதிப்பகுதியில் இலங்கையில் உள்ளுராட்சி தொடர்பான பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 1865 மற்றும் 1866 ஆம் காலப்பகுதியில்; கொழும்பு, கண்டி, காலி ஆகிய நகரங்களில் மாநகர சபைகள், 1865ஆம் ஆண்டு 17ஆம் இலக்க மாநகர கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்டன. 1871ஆம் ஆண்டின் 26ம் இலக்க கிராமக் குழுக்கள் சட்ட விதி (Village Committees Ordinance) நிறைவேற்றப்படதன் பிரகாரம் கிராம சபைகள் நிறுவப்பட்டன. பின்னர் 1892 இல் சிறிய நகரங்களில் சுகாதார குழுக்கள் (sanitary boards) அமைக்கப்பட்டன.
இதனிடையே 1928 ஆம் ஆண்டில் டொனமூர் ஆணைக்குழுவின் விதப்புரைக்கு அமைவாக உள்ளுராட்சித் திணைக்களம் தாபிக்கப்பட்டது. தொடர்ந்து 1940 இலும் 1946 இலும் முறையே பட்டின சபைகளும் (Town council ordinance 1939 of No 61) நகரசபைகளும் (Urban Council Ordinance 1942 of No 03) உருவாகின. அதன் பின்னர் 1980 ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க சட்டத்திற்கு அமைவாக மாவட்ட அபிவிருத்திச் சபைகள் உருவாக்கப்பட்டபோது கிராமசபைகளுக்கு உரிய அதிகாரங்கள் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு கையளிக்கப்பட்டது. அரசியல் நோக்கங்களுடன் உருவாக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகள் பல காரணங்களால் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாமல் இல்லாதொழிந்தது. இதன் பின்னர் 1987ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திச் சபையின் கீழ் உப அலுவலகங்களாக காணப்பட்ட பட்டின சபைகளும் கிராம சபைகளும் 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் ஒன்றாக்கப்பட்டு பிரதேச சபைகள் தாபிக்கப்பட்டது.